காமன்வெல்த் போட்டிக்கு தொடரும் பின்னடைவு

by Rameshraj 2010-09-23 10:50:04

புது தில்லி, செப்.22: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மேலும் ஒரு பின்னடைவாக புதன்கிழமை ஒரு விபத்து ஏற்பட்டது. தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன.

தில்லியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிக்காக ஸ்டேடியங்களைத் தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நடைபெறும் தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அலங்கார கூரை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காயம் இல்லை: அப்போது அலங்கார கூரையில் பதிக்கப்பட்டிருந்த அலங்கார ஓடுகள் (டைல்ஸ்) சரிந்து விழுந்தன. 2 அடி நீளம், 2 அடி அகலமுள்ள 3 ஓடுகள் மேலிருந்து கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

கடந்த 3 நாள்களில், இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது சம்பவமாகும் இது. ஸ்டேடிய நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை கடந்த திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

ஸ்டேடியத்தையும், வாகன நிறுத்துமிட பகுதியையும் இணைக்க கட்டப்பட்டு வந்த நடைபாலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, தில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதும், இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரர் விலகல்: இந்நிலையில், போட்டியில் சாதிப்பதைவிட உயிரே முக்கியம் எனக் கூறி இங்கிலாந்தைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீரர் பிலிப் இடாவ் விலகிவிட்டார்.

ஏற்கெனவே போட்டி ஏற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக போட்டி அமைப்புக் குழு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சர்வதேச காமன்வெல்த் போட்டி சம்மேளனமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் போட்டி ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருப்பதுடன் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து தினசரி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது அரசுக்கும், போட்டி அமைப்புக் குழுவுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

விசாரணைக்கு உத்தரவு

புதன்கிழமை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய பொதுப் பணித் துறை இயக்குநரக டைரக்டர் ஜெனரல் பி.கே.சக் தெரிவித்தார்.

அலங்கார கூரை இடிந்து விழவில்லை எனவும், அலுமினியக் கூரை மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடந்து சென்றபோது தவறான இடத்தில் வைக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் கீழே விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சிறு சம்பவம் எனவும், இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

திட்டமிட்டபடி போட்டி

திட்டமிட்டபடி காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இதுபோன்ற பெரிய அளவிலான போட்டிகளை நடத்தும்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான்.

பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்லதையே நினையுங்கள். நல்லது நடக்கும். திட்டமிட்டபடி போட்டி சிறப்பாக நடந்தேறும் என்றார் அவர்.

இன்று வருகிறார் ஃபென்னல்

சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் குழுத் தலைவர் மைக்கேல் ஃபென்னல் வியாழக்கிழமை தில்லி வருகிறார்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்த அவர், அது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகருக்கு கடிதம் எழுதியிருந்தார். வியாழக்கிழமைக்குள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கும் படி கடிதத்தில் கெடு விதித்து இருந்தார் அவர். இந்நிலையில் அவர் வியாழக்

கிழமை தில்லி வருகிறார்.

Tagged in:

1335
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments