லோகமான்ய பால கங்காதர திலகர் - பாரதியார் - கவிதை

by Geethalakshmi 2010-07-25 22:03:01

லோகமான்ய பால கங்காதர திலகர் - பாரதியார் - கவிதை


நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பன்
னாட்டி னோர்தங் கலையிலு மவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
சாத்தி ரக்கட லென்ன விளங்குவோன்;
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவள்
புன்மை போக்குவ லென்ற விரதமே.

நெஞ்ச கத்தோர் கணத்திலு நீங்கிலான்
நீத மேயொ ருருவெனத் தோன்றினோன்
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்கு மாறு மனதிற் கொதிக்கின்றோன்
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொ டோதும் பெயருடை யாரியன்.

வீர மிக்க மராட்டியர் ஆதர
மேவிப் பாரத தேவிதிருநுதல்
ஆரவைத்த திலக மெனத்திகழ்
ஐய னல்லிசைப் பாலகங் காதரன்
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற வெங்கள் திலக முனிவர்கோன்
சிர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனக் சிந்தித்தே.

லோகமான்ய பால கங்காதர திலகர் - பாரதியார் - கவிதை
2119
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments